பிரதமர் நரேந்திர மோடியை இமயமலைக்கு செல்லுங்கள் என்று தலித் தலைவரும், குஜராத் தேர்தலில் வெற்றி பெற்ற ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆதரவில் வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு ஜிக்னேஷ் மேவானி வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 19,696 வாக்குகள் அதிகம் பெற்றார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இமயமலைக்கு செல்ல வேண்டும் என்று ஜிக்னேஷ் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “பிரதமர் நம்மை போர் அடிக்க வைத்துவிட்டார். மக்களை முட்டாள் ஆக்குவதை நிறுத்த வேண்டும். சாமியார் போன்ற வேறு ஏதாவது ஒரு மாற்று தொழிலை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று விமர்சித்தார்.
ஜிக்னேஷ் மேவானி பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் பேசுயுள்ளதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். பிரதமர் குறித்த ஜிக்னேஷ் மேவானியின் பேச்சு இந்திய அளவில் #JigneshInsultsPM என்ற ஹேஷ்டேகில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் ஜிக்னேஷ் மேவானியை பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், தன்னுடைய பேச்சுக்கு ஜிக்னேஷ் மேவானி மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும், ஜிக்னேஷ் கூறுகையில், “இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஒவ்வொரு வருடமும் உருவாக்கித் தரப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்து இருந்தார். 4 வருடங்கள் ஆகிவிட்டது. 8 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இளைஞர்கள் குறித்தே பேசுவதில்லை” என்றார்.