டிரெண்டிங்

ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக திட்டம்

ஜார்க்கண்ட் தேர்தலில் தனித்துப் போட்டியிட பாஜக திட்டம்

rajakannan

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த தேர்தலில் தனித்து போட்டியிட ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2000ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டது முதல் 2005, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அரசு கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. 81 தொகுதிகள் கொண்டது ஜார்க்கண்ட் சட்டசபை. 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 30 இடங்களை பிடித்து பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால், கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. 

2009ஆம் ஆண்டு தேர்தலை ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. பாஜக கூட்டணிக்கு நான்கில் ஒரு பங்கு இடமே கிடைத்தது. பின்னர், மூன்றாவது கட்சியாக உருவெடுத்த ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவுடன் இணைந்து கூட்டணி அரசினை பாஜக அமைத்தது. இதில், பாஜக பிடித்த இடங்கள் வெறும் 18 தான். அதேபோல், 2014 தேர்தலில் பாஜக 37 இடங்களை பிடித்திருந்தாலும் மெஜாரிட்டிக்கு தேவையான 42 இடங்கள் கிடைக்கவில்லை. 

மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு பாஜக வந்தது. அத்தனை தேர்தலையும் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகளுடன் இணைந்தே பாஜக போட்டியிட்டு வந்துள்ளது. இதுவரை ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி, அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் அமைப்பு ஆகிய கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைத்திருக்கிறது.

கடந்த தேர்தலில் 72 இடங்களில் போட்டியிட்டிருந்த நிலையில், இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் யோசனையில் பாஜக உள்ளது. மற்ற கட்சிகளுக்கு அதிக அளவில் இடங்களை ஒதுக்கீடு செய்வதை தடுக்க வேண்டும் என்பதற்காக தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை சுயமாகவே பிடித்துவிடலாம் என்ற எண்ணத்திலும் இந்த முடிவினை பாஜக எடுத்துள்ளதாக தெரிகிறது. 2005இல் 63, 2009இல் 67, 2014இல் 72 இடங்களில் போட்டியிட்ட பாஜக இந்த முறை 81 தொகுதிகளில் களமிறங்குகிறது.