மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டால் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக திவாகரனின் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார்.
குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் வாரிசு அரசியல் பற்றி பேசுவது குறித்து அதிமுக அம்மா அணியின் டிடிவி தினகரன் விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த ராமசந்திரன், “சசிகலா சிறைக்கு செல்லும் முன் தினகரனை துணைப் பொதுச் செயலாளராக நியமித்தது வாரிசு அரசியல் இல்லாமல் வேறு என்ன? என்னைத் தவிர வேறு யாரும் இந்தக் கட்சியில் வேறு யாரும் தலைகாட்ட மாட்டார்கள் என்று சொன்னீர்கள். ஆனால், இப்போது திவாகரனின் மகன் ஜெயானந்தை மேலூர் கூட்டத்தில் பொது மேடையில் முன் வரிசையில் உட்கார வைத்து முடிசூட்டி இருக்கிறீர்கள். இதெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா? குடும்ப ஆட்சி இல்லையா? என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த், “குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரன் கூறுவதுபோல அது முடிசூட்டு விழாவாக என் கண்களுக்கு தெரியவில்லை. நான் முதல் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறேனா? பின் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறேனா என்பதை எல்லாம் கவனிப்பதை விட்டுவிட்டு எம்.எல்.ஏ ராமசந்திரன் தமது தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தவேண்டும்” என விளக்கமளித்தார்.
இதனையடுத்து “நீங்கள் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு முதலமைச்சர் ஜெயலலிதாவை கவனித்துக்கொள்வதில் கவனத்தைக் குறைத்துவிட்டீர்கள். உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்த்து வந்தனர். அப்படியிருக்க ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி திடீரென மரணம் அடையும் அளவுக்கு சென்றது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி சசிகலா குடும்பத்தில் உள்ள மருத்துவர்களுக்கு தெரிந்தும், அவரை முறையாக கவனிக்கவில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயருக்கு இழுக்கு ஏற்பட காரணமே சசிகலா குடும்பத்தினர் தான்” என குன்னம் தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த ஜெயானந்த், “எங்களிடம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆதாரங்கள் நூறு சதவீதம் உள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டால் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்” என ஜெயானந்த் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் வெளிப்படையாக பதில் கூறுவது இதுவே முதல்முறை.