டிரெண்டிங்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைப்பு

Rasus

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். முதலமைச்சர் அறிவிப்பு வெளியாகி 1 மாதத்திற்கும் மேலாகிய போதும், விசாரணை கமிஷன் அமைக்கப்படாமல் இருந்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு நீதிபதியை நியமிக்காமல் முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் முட்டுக்கட்டை போடுவதாக எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.ஸ்டாலின் குற்றச்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பார். கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைப்பாட்டால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பில் மர்மம் நிகழ்ந்துள்ளதாக பல தரப்பிலும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.