ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரின் கோரிக்கை ஏற்று, இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகே விசாரணை ஆணைய அறிவிப்பை வெளியிட வேண்டும் என்ற நடைமுறையை தமிழக அரசு பின்பற்றவில்லை என தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்பு விசாரணை ஆணையம் தேவையில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த தமிழக அரசு, தற்போது விசாரணை ஆணையம் அமைத்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக மனுதாரர் கூறியுள்ளார். விசாரணை ஆணையத்தில் அரசின் தலையீடு இருக்கும் என்பதால், அதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தமிழக அரசு விசாரணை ஆணையத்தை அமைத்தது.