டிரெண்டிங்

ஜெயலலிதா மரண விசாரணை: அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு சம்மன்

ஜெயலலிதா மரண விசாரணை: அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு சம்மன்

Rasus

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்களை நவம்பர் 22 ஆம் தேதி வரை தபால் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் விசாரணை ஆணையத்திடம் தக‌வல் அளித்துள்ளனர்.

இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை இன்று தொடங்கியுள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்த திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த சரவணனிடம் முதலில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு மருத்துவர்கள் 2 பேருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ஆறுமுகசாமி, ஜெயலலிதா மரண விவகாரத்தில் யாராக இருந்தாலும் உண்மையை வெளிக்கொண்டு வர முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றார். யார் எப்போது பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம் எனவும் ஆறுமுகசாமி கூறியுள்ளார். 2 பேருக்கு விசாரணை ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 2 பேர் யார் என்பது இதுவரை தெரியவில்லை. நாளை அவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகும் பட்சத்தில் அந்த இரண்டு மருத்துவர்கள் யார் என்ற விவரம் தெரிய வரும். எந்த தகவல் அடிப்படையில் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவலும் இதுவரை தெரியவரவில்லை.