ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்தியபாமா ஆஜராகியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார். ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக 9 மருத்துவர்களிடம் ஏற்கனவே விசாரணை நடைபெற்ற நிலையில், ஜெயலலிதா இறந்த பிறகு அவரது உடலை பதப்படுத்தி வைக்க எம்பாமிங் செய்தது குறித்து மருத்துவர் சுதா சேஷையனிடம் நேற்று நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். மேலும், சுதா சேஷையன் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர் என்பதால் சிகிச்சைகள் குறித்தும் மரணத்திற்கு பிறகான நடைமுறைகள் பற்றியும் நீதிபதி கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை கண்காணிப்பாளர் சத்தியபாமா ஆஜராகியுள்ளார். அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆஜராகும் முதல் நபர் சத்தியபாமாதான் என்பது குறிப்பிடத்தக்கது.