முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மத்திய அரசின் அழுத்தத்தால் தமிழகத்தின் நலன்கள் தாரைவார்க்கப்பட்டு விட்டதாகவும் சாடினார். கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் மதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு மேற்கு வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொது செயலாளர் வைகோ கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், காவேரியில் அணைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத எடப்பாடி அரசை கண்டித்தும் அவரை பதவி விலக கோரியும் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளதாக கூறினார். ஆனால் தடையை மீறி அறவழியில் முதல்வர் பதவி விலகக்கோரி போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
உச்சநீதி மன்ற நீதிபதி திபக்கமிஷ்ரா வீட்டில் மேகதாதுவில் அணைக்கட்டுவது குறித்து ஏற்கனவே முடிவு செய்து விட்டு, அந்த முடிவே நீதிமன்றத்தில் தீர்ப்பாக வழங்கப்பட்டதாகவும் வைகோ குற்றசாட்டினார். மோடி தலைமையிலான அரசுக்கு எடப்பாடி அரசு அடிபணிந்து விட்டதாக கூறிய வைகோ, முன்னால் முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களின் உரிமைகளை எப்போதுமே விட்டு கொடுத்ததில்லை எனவும் கூறினார்.