ஜெயலலிதா சிகிச்சைக் குறித்த வீடியோவை வெளியிட்டது தொடர்பாக டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முதல் நாள் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 20 நொடிகள் கொண்ட வீடியோ காட்சியை வெற்றிவேல் வெளியிட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் படுக்கையில் ஜூஸ் அருந்துவது போல் அந்தக் காட்சி இருந்தது.
இந்த வீடியோ உடனே வைரலாக பரவியது. தேசிய அளவில் ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது. ஜெயலலிதா தொடர்பான வீடியோ என்பதால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என்று தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியது. இதனையடுத்து, வெற்றிவேல் வீடியோ வெளியிட்டது குறித்து தினகரனும் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ ஆதாரத்தை வழங்கும் படி வெற்றிவேலுக்கு முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. வீடியோ வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்கவும் சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது.