ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் ஆணையம் பொன்னையனுக்கு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் பல்வேறு தரப்பினரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றது. இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா டிசம்பர் 4-ம் தேதியே இறந்துவிட்டதாக திவாகரன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதனை திவாகரன் மறுத்துவிட்டார். அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைதி காக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான பொன்னையன், ஜெயலலிதாவுக்கு ஸ்டிராய்டு மருந்துகளை தொடர்ந்து அளவுக்கு அதிகமாக செலுத்தி, ஸ்லோ பாய்சன் தரப்பட்டதாகப் பேசியிருந்தார். இதையடுத்து, விசாரணை ஆணையத்தில் ஆஜராகி அவர் விளக்கம் அளிக்க உத்தரவிட ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பொன்னையனுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.