அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் சந்தித்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்து அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். மருத்துவமனையில் அவர் இருந்தபோது அமைச்சர்கள் அவரை சந்தித்தாகவும் அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் உணவு உண்பதாகவும் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு கூட்டத்தில் பேசுகையில் அமைச்சர்கள் யாரும் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை எனவும், அன்றைய சூழலில் அவ்வாறு சொல்ல நேர்ந்ததாகவும் கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்ததாக கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் இருவர், இருவேறு கருத்துகள் கூறியுள்ளது தமிழக அரசியலில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.