டிரெண்டிங்

“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார்

“வைகோ, திருமா தன்மானம் உள்ளவர்கள்” - அமைச்சர் ஜெயக்குமார்

webteam

திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை தற்போது அவிழ்ந்துள்ளதால், எல்லோரும் உருண்டு ஓடிவிடுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் இல்லை என அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் அண்மையில் தெரிவித்திருந்தார். இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தாங்கள் திமுகவின் தோழமை கட்சிதான், கூட்டணி குறித்து இனிமேல் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். ஆனால் திமுகவை ஆட்சியில் அமர வைப்பேன் என கூறி வந்த வைகோவையும் துரைமுருகன் கூட்டணியில் இல்லை எனக்கூறியது துயரத்தில் ஆழ்த்தியது.

இதைதொடர்ந்து கூட்டணியில் மதிமுக உள்ளதா இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தெளிவு படுத்த வேண்டும் என வைகோ வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க கோரி ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் மதிமுகவின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

இதனிடையே, தோழமைகளாக இயங்கிவரும் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை கூட்டணியாக மாற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் கூறினார். அதோடு, திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து, வைகோவும், ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கழகப் பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஏழு பேர் விடுதலைக்காக நடத்தப்படும் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கமும் கூட என்று தெரிவித்தார்.

இந்நிலையில், திமுக கூட்டணி என்ற நெல்லிக்காய் மூட்டை தற்போது அவிழ்ந்துள்ளதால் எல்லோரும் உருண்டு ஓடிவிடுவார்கள் எனவும் வைகோ, திருமாவளவன் தன்மானம் உள்ளவர்கள் எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினி, பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலையில்லை எனவும் கூட்டணி குறித்த தங்கள் நிலைப்பாட்டை தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.