ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதலமைச்சர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், 5 பேரை துணை முதலமைச்சர்களாக தேர்ந்தெடுக்கவும், 25 கேபினட் அமைச்சர்களையும் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி., எஸ்.டி., பழங்குடி, ஓபிசி மற்றும் மைனாரிடிட்டி என ஒவ்வொரு வகுப்பை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் தெரிவித்துள்ளார். 5 துணை முதல்வர்கள் என்பது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன் உதாரணம்.
இந்நிலையில், அமராவதியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று காலை துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஜெகன் மோகனும் முறைப்படி முதல்வராக பொறுப்பேற்றார். பமுலா புஷ்பா ஸ்ரீவானி, பிள்ளை சுபாஷ் சந்திர போஸ், கிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், எல்.நாராயண சுவாமி மற்றும் அம்ஸாத் பாஷா ஆகிய 5 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
தந்தையும், முன்னாள் முதல்வருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மூத்த தலைவர்கள் பலருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி மீண்டும் தன்னுடைய அமைச்சரவையில் வாய்ப்பு அளித்தார்.
அதேபோல், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரதிபடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேகதோடி சுசரிடாவுக்கு உள்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த பெண். தெலங்கானா பிரிந்த பிறகு ஆந்திராவுக்கு பொறுப்பேற்றுள்ள முதல் பெண் உள்துறை அமைச்சர் இவர்தான். 25 அமைச்சர்களுக்கும் ஆந்திர ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.