சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களான பெண்கள் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், இதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து 2 ஆவது நாளாக செவிலியர்கள் சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களை இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான பெண்கள் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருவதாக தெரிவித்தார். மேலும், கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளை வைத்திருப்போர் இங்கு கடுமையான அவதிக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார். எனவே, இவர்களை கண்டிப்பாக சுகாதார அமைச்சர் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அரசாங்கம் பெண்களான செவிலியர்களை இதுபோன்று கொடுமைப்படுத்துவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய தமிழிசை, செவிலியர்களிடம் தமிழக அரசு கருணை காட்ட வேண்டும் என்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.