அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் என்ன உலக காவலரா? என்று இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பிரதமர் மோடியிடம் வினவியுள்ளார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்டது தொடர்பாக முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் சுமார் 30 நிமிடங்கள் உரையாடினார். இந்த உரையாடலின்போது இருநாட்டு உறவு மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ட்ரம்ப் இடம் பேசியது குறித்து இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “காஷ்மீர் விவகாரம் உள்நாடு விவகாரம் என்று இந்தியா குறிப்பிடும் போது எதற்காக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் காஷ்மீர் குறித்து பேசவேண்டும்? இவ்வாறு ட்ரம்ப் இடம் பேசியதன் மூலம் அவர் காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று கூறியதை பிரதமர் மோடி ஒற்றுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. காஷ்மீர் பிரச்னை இருநாடுகள் தொடர்பான விவகாரம். இதில் மூன்றாவதாக வேறு எந்த நாடும் தலையிடக்கூடாது.
மேலும் காஷ்மீர் விவகாரம் குறித்து பேச ட்ரம்ப் என்ன உலக காவலரா? அல்லது உலகத்தில் வலிமையான மனிதரா?” என்று இரு கேள்விகளை ஓவைசி எழுப்பியுள்ளார்.