இந்த ஐபிஎல் சீசனில் சாம்பியன் அணிகளின் தொடர் சொதப்பலுக்கு அந்த அணிகளால் அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட வீரர்கள் சோபிக்காமல் போனதே வீழ்ச்சிக்கு காரணமாகியுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 30 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது. நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ஒரு வெற்றி ஐந்து தோல்வியுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அணியின் “ஆணிவேர்” என்று அழைக்கப்படும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் சோபிக்காமல் போனதே வீழ்ச்சிக்கு காரணமாக உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா 16 கோடி ரூபாய்க்கும், பும்ரா 12 கோடி ரூபாய்க்கும், பொல்லார்டு 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டனர். ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இதுவரை அவர்கள் யாரும் விளையாடவில்லை. ரோகித் சர்மா ஆறு ஆட்டங்களில் 114 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஓப்பனராக களமிறங்கும் அவரின் சராசரி வெறும் 19 தான். பினிஷர் பொல்லார்டு 6 ஆட்டங்களில் 82 ரன்கள் எடுத்துள்ளார். அவரின் சராசரி 25 மட்டுமே. பிரதான பந்துவீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகள் மட்டுமே சாய்த்துள்ளார்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா 16 கோடி ரூபாய்க்கும், டோனி 12 கோடி ரூபாய்க்கும், மொயீன் அலி 8 கோடி ரூபாய்க்கும், கெய்க்வாட் 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்கப்பட்டனர். இதில் முதல் ஐந்து போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்த கெய்க்வாட், குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் அரைசதம் அடித்தார். கேப்டன் பொறுப்பை வகிக்கும் ஜடேஜா, 88 ரன்களும் ஐந்து விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மொயீன் அலி 87 ரன்களும், தோனி 92 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர்.
தக்கவைக்கப்பட்ட வீரர்களில் டெல்லி அணியில் அக்ஷர் பட்டேல், நோர்ஜே, ராஜஸ்தான் அணியில் ஜெய்ஷ்வால், பெங்களூரு அணியில் முகமது சிராஜ், கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்டோரும் தங்கள் மதிப்புக்கு ஏற்ப விளையாடவில்லை. முதற்பாதியை சீசன் நெருங்கிவிட்ட நிலையில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பொறுப்புணர்ந்து விளையாடினால்தான் ஐபிஎல் சீசன் களைகட்டும் என்பதே யதார்த்தம்.
- பாலமுருகன்.