தொடர்ந்து 3 ஆட்டங்களில் சொதப்பி வரும் ருதுராஜ் குறித்து பேசிய கேப்டன் ஜடேஜா அடுத்தடுத்த போட்டிகளில் ருதுராஜ் நன்றாக விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஐபிஎல் 2022 தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 54 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் 3 போட்டிகளில் சென்னை அணி ஹாட்ரிக் தோல்வி சந்திப்பது இதுவே முதல் முறையாகும். தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா அளித்த பேட்டியில் “நாங்கள் பவர் ப்ளேயிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். குறிப்பிட்ட ஓவரில் இருந்து பந்தில் வேகத்தை காணவில்லை. நாங்கள் வலுவாக மீண்டு வருவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.
சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து சொதப்பி வருவது ஜடேஜாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜடேஜா, “அவரது ஃபார்ம் குறித்து கவலை இல்லை. அவர் ஒரு சிறந்த வீரர் என்பதை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், அவருக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். அவர் நன்றாக வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.
இந்த சீசனில் முதல் 3 போட்டிகளில் ருதுராஜ் அடித்த ரன்கள் 0, 1 மற்றும் 1. ஆரஞ்சு கேப் வின்னராக ருதுராஜ் திகழ்ந்த கடந்த சீசனிலும் முதல் 3 ஆட்டங்களை இதுபோல சொதப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி.. மூழ்கும் அபாயத்தில் சிஎஸ்கே - 2020 திரும்புகிறதா?