டிரெண்டிங்

ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்காதது பற்றி விசாரணை: காங். கோரிக்கை

ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்காதது பற்றி விசாரணை: காங். கோரிக்கை

webteam

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க வந்த யாரையும் அனுமதிக்காதது குறித்து நீதி விசாரணை நடத்தப்படவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல்நல குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவர் சிகிச்சை பெற்றபோது யாரும் அவரைபார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது.

இந்நிலையில் மதுரையில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ’மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி  சாப்பிட்டார் என்று நாங்கள் சொன்னது பொய். உண்மையிலேயே நாங்கள் அதை பார்க்கவில்லை. மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக அப்படிச் சொன்னோம். இதற்காக எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்’ என்றார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை விரைவில் தொடங்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் சிவந்தி ஆதித்தனாரின் பிறந்தநாளை ஒட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை பார்க்க வந்த யாரையும் அனுமதிக்காதது குறித்து நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்றார்.