டிரெண்டிங்

ராஜகண்ணப்பனை கலாய்த்து வசமாய் நெட்டிசன்களிடம் சிக்கிய எஸ்வி சேகர்

webteam

அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பனை கிண்டல் செய்வதற்காக ட்விட்டரில் எஸ்வி. சேகர் பதிவிட்ட ஸ்டேட்டஸ் அவருக்கே வினையாய் திரும்பியுள்ளது. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் திமுகவுக்காக பரப்புரையில் ஈடுபடுவேன் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

நோட்டாவை தாண்டாத பாஜகவுக்கு 5 தொகுதிகளா என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்தார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில், ராஜ கண்ணப்பனின் கொள்கைப் பாதை என ட்விட்டரில் எஸ்.வி.சேகர் ஒரு ட்வீட் பதிவு செய்தார். அதில்,1991-96- அதிமுக அமைச்சர், 2000 - மக்கள் தமிழ் தேசம், 2006 - கட்சி கலைப்பு, 2006 - திமுக, 2009- திமுக எம்.எல்.ஏ வாக அதிமுகவுக்கு தாவல், 2016- தீபா அணி, 2017- ஓபிஸ் அணி, 2017- ஒருங்கிணைந்த அதிமுக, 2019- மீண்டும் திமுக, 2021 - ?? என கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் அவரின் பதிவு அவருக்கே வினையாய் திரும்பியுள்ளது. அவரின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் அது இருக்கட்டும் உங்கள் கொள்கை பாதை என்ன என கேட்டு கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து அதிருப்தி எம்.எல்.ஏவாக வெளியேறி பின்னர் காங்கிரஸில் இருந்துவிட்டு பின்னர் பாஜகவுக்கு தாவியதாக சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் பலர் மீம்ஸ் மூலமாக விமசித்து வருகின்றனர்.