திருவாரூர் நகராட்சி தேர்தலில் மழை, வாக்குவாதம், மின்சாரம் துண்டிப்பு என ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் அரங்கேறியுள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், 7 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறுகிற பிப்ரவரி 19ம் தேதி இன்று அதிகாலை 5 மணி முதல் சாரல் மழை ஆரம்பித்து ஏழு மணிக்கு மேலாக சற்று மிதமான மழை பெய்தது. வாக்காளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயின்கோட் அணிந்து கொண்டும், குடைபிடித்துக்கண்டும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார்கள்.
அதைப்போலவே திருவாரூர் நகராட்சி உட்பட்ட தெற்கு வீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கு அமைக்கப்பட்ட வாக்கு மையங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் மின்சாரம் தடைபட்டு தேர்தல் நடத்தும் அரசு அதிகாரிகள் தங்களுடைய செல்போனில் லைட் அடித்து வாக்காளர்கள் ஜனநாயக கடமையாற்ற உதவினார்கள். சுமார் 15 நிமிடம் மின்சாரம் தடைபட்டு அதன் பிறகு சரி செய்யப்பட்டது.
அதைப்போலவே, வார்டு 18, 19 மற்றும் 21 ஆகிய இடங்களில் வாக்காளர்கள் அவர்களுக்கு உரித்தான வாக்குச்சாவடிகளில் வாக்கு செலுத்த செல்லும்போது அதிமுக, பாஜக மற்றும் திமுக கட்சியின் அந்தந்த வார்டுகளின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறி 200 மீட்டருக்கு உள்ளாக உள்ள பகுதியில் நின்று கொண்டு வாக்காளர்களிடம் வாக்குக் கேட்டார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முற்பட்டபோது அவர்கள் சென்றால்தான் நான் செல்வேன் என்று திமுக நிர்வாகியும், பாஜக வேட்பாளரும் மாறி மாறி வாக்குவாதம் செய்தனர்.
அதன்பிறகு இருவருமே 200 மீட்டருக்கு உள்ளே இருப்பதை உணர்த்திய காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இவ்வாறு திருவாரூர் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது.