ஜெயலலிதா மரணம் குறித்த நீதி விசாரணை என்பது ஒரு கபட நாடகம் என்று தீபா கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யப்படும். அவரின் போயஸ் இல்லமும் அரசுடைமையாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறும்போது, ’ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்களையும், அதிமுக உண்மை தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன். ஒரு முதல்வராக இருந்து இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னால் சசிகலா குடும்பத்தினர் தான் இருக்கிறார் என்பது நிச்சயம்.
அவசர அவசரமாக எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காக அரசு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. வேதா நிலையம் என்பது எங்கள் பூர்வீக சொத்து. இதை விற்கவோ, வாங்கவோ யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. வேதா நிலையத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது. அரசை காப்பாற்றிக்கொள்ள எடுக்கப்பட்ட கடைசி யுக்தியாக இதை பார்க்கிறேன். கட்சியை, ஆட்சியை கைப்பற்றவே ஈபிஎஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நீதி விசாரணை என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்தது. சந்தர்ப்பம் இருந்தும் ஓபிஎஸ் உண்மையாக செயல்படவில்லை. கட்சிக்கும், ஆட்சிக்கும் சண்டையிட்டவர்கள் இப்போது நீதி விசாரணை கோறுவதில் அர்த்தமே இல்லை. நீதி விசாரணை என்பது ஒரு கபட நாடகம், அரசியல் ஆதாயத்திற்காகவே இவர்கள் இப்படி செய்கிறார்கள். என் பங்கேற்பு இல்லாமல் நீதி விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. மத்திய அரசு விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும். போயஸ் தோட்டத்தில் தற்போதுவரை இருந்து வரும் ஊழியர்களிடம் விசாரிக்க வேண்டும். இந்த நீதி விசாரணை என்பதே ஒரு கபட நாடகம்’ என்று கூறினார்.