முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலுவுக்கு சொந்தமான 16 இடங்களில் 19 மணி நேரத்தை கடந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட 16 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எ.வ.வேலுவை ஆதரித்து திருவண்ணாமலையில் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டிருந்த சூழலில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக திருவண்ணாமலையில் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடைபெற்றதாக தொலைபேசி மூலம் தங்களுக்கு புகார் வந்ததாகவும் அதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாகவும் வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த எ.வ.வேலு, திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறார்.