டிரெண்டிங்

“வெறுப்பை காட்டியவர்களிடம் அன்பு காட்டியவர் ராகுல்” - பிரியங்கா புகழாரம்

“வெறுப்பை காட்டியவர்களிடம் அன்பு காட்டியவர் ராகுல்” - பிரியங்கா புகழாரம்

rajakannan

நாட்டில் பிரிவினையும், வெறுப்பும் பரவியுள்ள சூழலில், அன்பு செலுத்தி பிரச்னைக்கு தீர்வு காணும் ராகுல் காந்தியின் திறன் மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக அவரது சகோதரியும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து மானந்தவாடி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாரதிய ஜனதா நாட்டில் வெவ்வேறு மாநிலங்களுக்கிடையில் வேறுபாட்டை புகுத்தியிருப்பதாக குற்றம்சாட்டினார். 

விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாக்கப்படும், 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வங்கிக்கணக்கில் 15 லட்சம் ரூபாய் என பாரதிய ஜனதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தவறிவிட்டதாக கூறினார். அதிகாரத்திற்கு வந்தபின்னர் அந்த அதிகாரத்தை அளித்தவர்களையே பராரதிய ஜனதா மறந்துவிட்டதாகவும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். 

காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட கட்சி எனக் குறிப்பிட்ட பிரியங்கா, பல மாநிலங்களில் விவசாயக் கடன்களை காங்கிரஸ் கட்சி தள்ளுபடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார். ராகுல் காந்தியை குறித்து விரிவாக பேசிய பிரியங்கா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்கள் மீது கூட வெறுப்பு ஏற்படவில்லை எனக் கூறியவர் ராகுல் எனக் குறிப்பிட்டார். 

ஒரு விமானி, ஆழ்கடல் நீச்சல் வீரர், தற்காப்பு கலை வல்லுநர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர் ராகுல் காந்தி என்றும் அது குறித்து விளம்பரத்தை விரும்பாதவர் என்றும் பிரியங்கா கூறினார். வெறுப்பை காட்டியவர்களிடம் அன்பு காட்டியவர் ராகுல் காந்தி என்றும் தெரிவித்தார். அவர் வெற்றி பெற்றால் வயநாடு பாதுகாப்பாக இருக்கும் என பிரியங்கா கூறினார்.