டிரெண்டிங்

'ஒரு தாயின் பிள்ளைகள் இருவரும் ஒன்று சேர வேண்டும்'-மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்..!

kaleelrahman

'ஒரு தாயின் பிள்ளைகள் இருவரும் ஒன்று சேர வேண்டும்' என மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மீதிருந்த கருத்து வேறுபாடு மற்றும் குடும்ப பிரச்னைகள் காரணமாக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதனால் மு.க.அழகிரி கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்.


கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.அழகிரி அவ்வப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், கட்சி தலைவர்கள் மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வந்தார். அழகிரியின் விமர்சனங்கள் திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, விவாத பொருளாகவும் மாறியது.

இந்த நிலையில் மதுரையில் திமுக ஆதரவாளர் ஒருவர், மு.க.ஸ்டாலின் மற்றும் மு.கஅழகிரி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் ஒருசேர கைகளை சேர்த்து வைத்திருப்பது போன்ற புகைப்படத்துடன், ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஒரு தாயின் பிள்ளைகளே இருவரும் ஒன்று சேர வேண்டும், அதுவே தமிழகத்தின் எதிர்பார்ப்பு, இந்த தொண்டனின் எதிர்பார்ப்பு’ எனவும், 2021ல் தமிழகத்தை சேர்ந்து மீட்டெடுக்க அழையுங்கள் தலைவரே - இணையுங்கள் அண்ணா அஞ்சா நெஞ்சரே என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மு.க.அழகிரியை திமுகவில் இணைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக திமுக ஆதரவாளர் ஒருவரால் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.