2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா குற்றஞ்சாட்டியிருந்தார். தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஈவிஎம் இயந்திரங்களை ஹேக் செய்ய உதவியது என புகார் தெரிவித்தார்.
இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் கடுமையான மேற்பார்வை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் படியே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும், 2010-ல் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் தரநிலை அடிப்படையிலேயே இயந்திரம் தயாரிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சூழலில் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏன் கொண்டுவரப்பட்டத்து என்பது பற்றி பார்ப்போம்.
ஜனநாயக முறையில் முக்கியமான ஒன்று தான் தேர்தல். ஏனென்றால், தேர்தல்களின் மூலம் தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தேடுக்கின்றனர். இதனால் இந்த முறையில் தவறுகள் நடைபெறாமல் பார்த்துகொள்ளவேண்டியதே தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. இதுவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 324 ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் அவ்வப்போது தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்கள் செய்துகொண்டே வருகிறது. அப்படியொன்று தான் தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியதும்.
1989 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால் கடந்த 1998 ஆண்டில் சோதனை முயற்சியாக மூன்று மாநில தேர்தலில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. அதன்பின் 1999ஆம் ஆண்டு கோவா மாநில தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இதற்கு பிறகு 2000 ஆம் ஆண்டு முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தேர்தகளிலும் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதற்கு முன்பு தேர்தல்களின் நிலை:
தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முன் வாக்குச்சீட்டுகள் முறை அமலில் இருந்தது. அப்போது தேர்தலில் அதிக இடங்களில் கள்ள ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தேர்தல் நடக்கும் பூத்துகள் கைப்பற்றப்பட்டு ஒரு வேட்பாளருக்கு அதரவாக ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல பல தொகுதிகளில் செல்லாத ஓட்டுகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும் பல்வேறு தொகுதிகளில் தேர்தல்களில் மோசடியும் நடைபெற்றது. வாக்குப்பதிவு சீட்டுகளை பாதுகாப்பதிலும் தேர்தல் ஆணையத்திற்கு சிக்கல் ஏற்பட்டது. அத்துடன் வாக்குச்சீட்டுகளை எண்ணுவதில் அதிக பிழைகள் ஏற்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனால் தேர்தல்களின் முடிவுகளை அறிவிப்பதிலும் தேர்தல் ஆணையத்திற்கு சிரமம் ஏற்பட்டது. இதனால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்திய பிறகு தேர்தல்களின் நிலை:
தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தியதன் மூலம் தேர்தலில் நடைபெறும் மோசடிகள் குறைக்கப்பட்டன. மேலும் ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் வாக்குப்பதிவு இயந்திரங்களால் இந்திய தேர்தல்களில் செல்லாத ஓட்டுகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
அதேபோல வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் 5 ஓட்டுக்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். அதனால் பூத்துக்களை கைப்பற்றி வாக்குப்பதிவு செய்வது மிகவும் கடினமான ஒன்றானது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட பின்பு தேர்தலில் வாக்களிக்க அதிக பெண்கள் மற்றும் பட்டியிலினத்தவர்கள் முன்வந்ததாகவும் கூறப்பட்டது.
தேர்தல் முடிவுகள் அறிவிப்பதை வாக்குப்பதிவு இயந்திரங்கள் எளிதாக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களால் குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையிலிருந்து மறுபடியும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கைவிடுகின்றன.