டிரெண்டிங்

தேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்

தேர்தல் நேரத்தில் குற்றச்சாட்டுகள் வர வாய்ப்பு உள்ளது- பொன்.ராதாகிருஷ்ணன்

webteam

தேர்தல் நெருங்கும்போது கோடநாடு விவகாரம் போன்ற குற்றச்சாட்டுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் பணியாளர்கள் மரணம் தொடர்பாக தெஹல்கா ஊடகத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஒரு வீடியோவை அண்மையில் வெளியிட்டார். இது வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் மேத்யூஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி மாவட்ட பள்ளிக்கூட ஆசிரியர்கள் உடன் குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “கோடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மற்றும் முதலமைச்சர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது. தேர்தல் நெருங்கும் போது இது போன்ற குற்றச்சாட்டுக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு ஆனால் இது குறித்து விளக்கம் முதல்வர் தரப்பில் கூறப்பட்டுள்ளது”. 

மேலும், “காங்கிரஸ் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கட்சி, திமுக தமிழகத்தில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட கட்சி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். திமுக தமிழகத்தில் மிகவும் மோசமான நிலைக்கு போவதற்கு அடிப்படை காரணம் யார் என்பது குறித்து திமுகவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களே தெளிவு பட கூறியிருக்கிறார். கூடா நட்பு கேடாய் முடியும் என தெளிவு படுத்தி இருக்கிறார். இதனையும் மீறி காங்கிரஸ் உடன் கூட்டணிக்கு போவது கலைஞருடைய கனவும் நினைவுமாக இருந்த திமுக கட்சியை அழிப்பதற்கு உரிமை கொடுக்கப்படுகிறது என்று தான் அர்த்தம். திமுக தொண்டர்களுக்கு திமுக தலைமை தொடர்ந்து அதிர்ச்சியை கொடுக்கும் என்று கருதுகிறேன். இதன் மூலம் கலைஞரின் வார்த்தை பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வார்த்தையாக இந்த தேர்தலுக்கு பின் இருக்கும்” என்று கூறினார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

அத்துடன் “அரசியல் கட்சி என்று வந்தால் அந்த அரசியல் கட்சி குறித்து அனைத்து அரசியல் வாதிகளும் கருத்து கூறுவதற்கு உரிமையுண்டு இல்லையென்றால் வீட்டில் தான் இருக்க வேண்டும். தம்பிதுரை மற்றும் கடம்பூர் ராஜு அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நல்ல நெருக்கமான உறவுடன் இருந்து வருகிறேன். அரசியலில் முடிவு எடுக்கும் அதிகாரம் கட்சியில் யாரிடம் உள்ளது என்பதை கருதுவதற்கு தான் நான் கருத்து தெரிவித்தேன் ”என கூறினார் மத்திய இணை அமைச்சர்  பொன். ராதா கிருஷ்ணன்.