டிரெண்டிங்

பாஜகவில் இணைந்தார் சத்தீஸ்கர் காங். மூத்த தலைவர்

rajakannan

சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த மூத்த தலைவர் ராம்தயாள் உய்க் பாஜகவில் இணைந்தார். பாஜக தலைவர் அமித்ஷா, சத்தீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் இணைந்துள்ளார். 

சத்தீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராம்தயாள் 15 வருடங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறினார். தற்போது, மீண்டும் பாஜகவுக்கு திரும்பியுள்ளார்.

“பழங்குடியின மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு சார்பாக இல்லை. காங்கிரஸ் சொல்வதற்கும், செய்வதற்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போது திக்குமுக்காடி இருந்தேன்”  என்றார் ராம்தயாள்.

90 தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, சத்தீஸ்கர் மாநிலத்தில் அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக மாயாவதி தடாலடியாக அறிவித்துவிட்டார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சைலேஷ் நிதின் திரிவேதி, “எந்த காரணத்தை சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு வந்தாரோ, அதே காரணத்துக்காக பாஜகவில் இணைந்துள்ளார். நேற்று வரை காங்கிரஸ் கட்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வந்தார். அதனால், நேற்று இரவு ஏதோ சதி நடந்துள்ளது” என்றார்.