வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு படிப்பு என எல்லாமே செல்போன், டிவி, கம்யூட்டருக்குள் வந்துவிட்டது. நாள் முழுவதும் வெளிச்சமான திரையையே பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு எளிதில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்துவிடும். சிறு வயதில் கண்ணாடி அணியும் குழந்தைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே தினமும் குழந்தைகளுக்கு சில உணவுகளைக் கொடுப்பதன்மூலம் பார்வைத் திறனை மேம்படுத்தலாம்.
சீஸ் மற்றும் முட்டை
குழந்தைகளுக்கு சீஸ், முட்டை போன்ற உணவுகள் மிகவும் பிடிக்கும். இவை இரண்டிலுமே கண்ணுக்குத் தேவையான வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. தினமும் ஆம்லெட், வறுவல் என எதனுடன் வேண்டுமானாலும் சீஸ் சேர்த்துக் கொடுக்கலாம்.
மீன்
மீன் கண்ணுக்கு நல்லது என அனைவருக்கும் தெரிந்ததே. சால்மன் மற்றும் மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாகவே இருக்கிறது. குழந்தைகள் மீன் விரும்பி சாப்பிட்டால் வெவ்வேறு வடிவங்களில் அவர்களுக்கு பிடித்த மாதிரி செய்து கொடுக்கலாம்.
பாதாம் சாக்லெட்
உலர் பழங்களை வெறுமனே கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். சாக்லெட் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே வைட்டமின் ஈ அதிகமுள்ள ஒரு நல்ல உணவைக் கொடுக்க பாதாமை சாக்லெட்டுடன் சேர்த்து ஒரே உணவாகத் தயாரித்து சிற்றுண்டியாகக் கொடுக்கலாம்.
காய்கறிகள்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டியது காய்கறிகள்தான். வைட்டமின் ஏ, சி, கே என அனைத்து ஊட்டச்சத்துகளும் காய்கறிகளிலிருந்து உடலுக்கு கிடைக்கும். பல நேரங்களில் பெரியவர்களே காய்கறிகளை வேண்டாம் என ஒதுக்கிவைப்பார்கள். குழந்தைகளுக்கு சொல்லவா வேண்டும். எனவே அவர்களுக்கு பிடித்த வடிவில் சப்பாத்திக்குள் ஸ்டஃப் செய்தோ, பர்கருக்குள் வைத்தோ, சட்னி, தொக்கு செய்தோ கொடுக்கலாம்.
பழங்கள்
பழங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. ஆனால் குழந்தைகள் எல்லாப் பழங்களையும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். எனவே அவர்களுக்கு மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட் செய்துகொடுக்கலாம். இதனால் வைட்டமின் ஏ அதிகம் உடலில் சேரும்.