டிரெண்டிங்

"நோட்டா"வுக்கு அதிக வாக்களித்தது உயர் ஜாதி வகுப்பினர் ! - ஆய்வில் தகவல்

"நோட்டா"வுக்கு அதிக வாக்களித்தது உயர் ஜாதி வகுப்பினர் ! - ஆய்வில் தகவல்

webteam

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என வாக்காளர் ஒருவர் விரும்பினால், 49ஓ படிவத்தை நிரப்பி, வாக்குப்பதிவு அலுவலரிடம் அளிக்கும் முறை இருந்து வந்தது. இந்த நடைமுறையால், வாக்காளரின் அடையாளம் வெளியாகிறது என புகார் வந்த நிலையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வாக்குப்பதிவு எந்திரத்திலேயே, நோட்டாவுக்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.

2013 ஆம் ஆண்டு சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக நோட்டா அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக 2014 ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது இந்தியா முழுவதும் 60 லட்சம் வாக்காளர்கள், நோட்டாவை தேர்ந்தெடுத்திருந்தனர். இது மொத்தம் பதிவான வாக்குகளில் ஒன்று புள்ளி பூஜ்யம் 8 சதவிகிதமாகும்.

கடந்த தேர்தலில், மேகாலாய மாநிலத்தில்தான் அதிக வாக்காளர்கள், அதாவது 30 ஆயிரத்து 145 பேர் நோட்டாவை தேர்வு செய்திருந்தனர். இது பதிவான வாக்கில் இரண்டு புள்ளி ஒன்பது எட்டு விழுக்காடு ஆகும்.சத்தீஸ்கரில் 2 லட்சத்து 24 ஆயிரம் பேரும், குஜராத்தில் 4 லட்சத்து54 ஆயிரம் பேரும் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். தமிழகத்தை பொருத்தவரையில் 4 லட்சத்து 33 ஆயிரம் பேர் நோட்டாவை தேர்ந்தெடுத்திருந்தனர். அதிகபட்சமாக நீலகிரி தொகுதியில் 46 ஆயிரத்து 559 பேர் நோட்டாவுக்கு வாக்களித்திருந்தனர். இது நாட்டிலேயே அதிகபட்சமாகும்.

நோட்டா அளிக்கும் வாக்குகளுக்கு தேர்தல் ஆணையம் எவ்வித அங்கீகாரமும் வழங்கவில்லை. அதாவது, வெற்றி பெறும் வேட்பாளர்கள் பெறும் வாக்குகள் நோட்டாவைவிட குறைவாக இருந்தாலும், அந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவதில்லை. எனினும், கடந்த மக்களவைத் தேர்தலில் 23 தொகுதிகளில், வெற்றி தோல்வியை நோட்டா வாக்குகள் நிர்ணயித்துள்ளன. அதாவது, முதலிடம் பிடித்த வேட்பாளருக்கும், 2-ம் இடம் பிடித்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தைவிட 23 தொகுதிகளில் நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன. இதன் மூலம், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பாஜக 4 இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தன.

இதனிடையே, உயர் ஜாதி வகுப்பினரே, அதிக அளவில் நோட்டாவுக்கு வாக்களித்ததாக, தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த தேர்தலில் 72 விழுக்காடு உயர் ஜாதியினரும்,58 விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தலித்துகளில் 32 விழுக்காடு பேரும் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதேபோல இஸ்லாமியர்களில் 9 விழுக்காடு பேரும், சீக்கியர்களில் 5 விழுக்காடு பேரும், நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். மேலும், ஏழைகளில் 58 சதவிகிதம் பேரும், நடுத்தர வர்க்கத்தினர் 83 சதவிகிதம் பேரும், வசதியானவர்களில் 34 சதவிகிதம் பேரும் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளதாக, சி.எஸ்.டி.எஸ். தனியார் ஆய்வு அமைப்பு கூறியுள்ளது