போதிய மதிப்பெண்கள் இல்லாத போதும், தன்னுடைய மகளுக்கு மருத்துவ சீட் வாங்கி கொடுத்ததாக வெளியான செய்திகள் குறித்து, செய்தியாளர்களின் எழுப்பிய கேள்விக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நீட் தேர்வுக்கு கிருஷ்ணசாமி ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்டு மருத்துவ இடம் பெற்றுகொண்டதாக செய்திகள் வெளியானது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், "சட்டமன்றத்தில் கிருஷ்ணசாமி பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் எழுந்து உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள். அடுத்த நிமிடமே ஜெயலலிதா மருத்துவ சீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக் கேட்க.., அப்போது கிருஷ்ணசாமி நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே, கிருஷ்ணாசாமி மற்றும் அப்போதையை அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்பான சட்டப்பேரவை குறிப்பும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அனிதாவின் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கிருஷ்ணசாமி இன்று மனு அளித்தார்.
பின்னர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெயலலிதாவிடம் தன்னுடைய மகளுக்கு அவர் மருத்துவ சீட்டுக்கு உதவி பெற்ற விவகாரம் குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் செய்தியாளர்களின் கேள்விக்கு கிருஷ்ணசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.