டிரெண்டிங்

’சீட் வழங்காவிட்டால் அமைச்சரை எதிர்த்து போட்டியிடுவேன்’ புதுக்கோட்டை அதிமுக நிர்வாகி

kaleelrahman

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காவிட்டால் அமைச்சரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று புதுக்கோட்டை அதிமுக நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளராக தர்ம தங்கவேல் என்பவரை நேற்று அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில் அதிமுகவில் நீண்டகாலமாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் கடந்த 45 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தர்ம தங்கவேல் என்பவருக்கு சீட் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அதிமுக நிர்வாகியும் முன்னாள் ஆலங்குடி தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்த திருமாறனின் மகனும் கொத்தமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பாண்டியன் தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் இன்று ஆலங்குடியில் கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக நிர்வாகி பாண்டியன் கூறுகையில், “கடந்த முறை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது ஆலங்குடி தொகுதிக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னை நேர்காணலுக்கு அழைத்து இருந்ததாகவும், இந்நிலையில் இந்த முறை கட்சியில் நீண்ட காலமாக உழைத்த நபர்களுக்கு வாய்ப்பு வழங்காமல் காங்கிரஸ் கட்சியிலிருந்து இணைந்த ஒரு நபருக்கு சீட்டு வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது. இதனை உடனடியாக கட்சித் தலைமை பரிசீலனை செய்து கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்” என்றும் கூறினார்.

“அப்படி கட்சித் தலைமை வாய்ப்பளிக்காவிட்டால் ஆலங்குடி தொகுதியில் , நாளை சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளேன், இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியான விராலிமலையிலும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்”  என்று அவர் தெரிவித்தார்.