டிரெண்டிங்

ஒருவர் கையேந்தினால் பிச்சை, அனைவரும் ஒன்றாக கையேந்தினால் அதற்கு பெயர் இலவசம்: சீமான்

Veeramani

இலவசங்களைத் தவிர்த்துவிட்டு மக்களின் வாங்கும் திறனையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழக்கறிஞர் ஜெயராஜ் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காந்தி சிலை அருகே பரப்புரை மேற்கொண்டார். திறந்த பரப்புரை வேனில் நின்றவாறு சீமான் பேசும் போது, “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வாசிங்மிசின், கிரைண்டர் மிக்ஸி போன்ற இலவசங்கள் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் இது போன்ற பொருட்களை மக்களே வாங்கும் அளவிற்கு பொதுமக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.

தரமான இலவச கல்வி, இலவசமான சுத்தமான குடிநீர், உலகத் தரத்திலான இலவச மருத்துவம், மக்களுக்கு தடையற்ற மின்சாரம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் போன்றவை மட்டுமே நாம் தமிழர் ஆட்சியில் கிடைக்கும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்வியில் முதல் மாநிலமாக உலக அளவில் தமிழகம் மாறும். பொதுமக்கள் இலவசம் கேட்டு கையேந்தும் நிலை நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாறும். சீமான் கையேந்தினால் பிச்சை. மக்கள் அனைவரும் ஒன்றாக கையேந்தினால் அதற்கு இலவசம் என்ற பெயர்.

அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலை பற்றி சிந்திப்பார்கள். அதனால் தான் தேர்தல் நேரத்தில் வெற்று அறிவிப்புகள் வருகிறது. ஆனால் தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திப்பார்கள். அப்படி சிந்தித்த தலைவர் காமராஜர். படிக்காத அவர் பள்ளிகளை திறந்தார். அடுத்து வந்தவர்கள் டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்க வைத்தார்கள். குருதிக் கொடை கொடுக்கும் தமிழர் படை என்ற அமைப்பை நிறுவி இது வரை 12 ஆயிரம் யூனிட் ரத்தம் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

மற்ற அரசியல் கட்சியினர் நம்மை ஆள வேண்டும் என நினைப்பார்கள். நாம் தமிழர் கட்சியினர் மக்களை வாழ வைக்க வேண்டும் என நினைக்கிறோம். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது ஆனால் மாறுதல் வரவில்லை. அப்படி இல்லாமல் இந்த தேர்தலை மாறுதலுக்கான தேர்தலாக மக்கள் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிக்கு நன்றி சொல்லி கரும்பு விவசாயி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். விவசாயி வாழுவான் நம்மையும் வாழ வைப்பான்” என்றார்.