பெரும்பான்மை இல்லாவிட்டால் பதவி விலக தயார் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
இலங்கையில் ஒரேநாளில் அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவிடம் மோதல் போக்கு நீடித்த நிலையில், அவரை திடீரென நீக்கி அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்தார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக அறிவித்த அதிபர், அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இது குறித்து அதிபர் சிறிசேன எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை அரசியலமைப்பின் 42 பிரிவின்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எட்டு மணிநேரத்தில் நடந்துள்ள நீக்கமும், புதிய பிரதமர் நியமனமும் இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்றது குறித்து பேசிய ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியில் நீடிப்பதாகவும், தம்மை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் கூறியுள்ளார். ராஜபக்சேவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தது சட்டவிரோதமானது என்றும் அரசமைப்புக்கு விரோதமானது என குறிப்பிட்டார்.
இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16 ஆம்தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மை இல்லாவிட்டால் பதவி விலக தயார் என்று ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் ஒத்திவைப்பது அரசியல் அமைப்பை மீறும் செயல். அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவது குறித்த திட்டம் உள்ளது. அரசியலமைப்பின்படி பெரும்பான்மை உள்ளவரே பிரதமர் பதவியை வகிக்க வேண்டும். நாடாளுமன்ற பெரும்பான்மை எனக்கு உள்ளது” என்றார் ரணில் விக்ரமசிங்கே.
இலங்கை -கட்சிகள் பலம்:-
நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225
ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி - 106
அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி- 96
தமிழ் தேசிய கூட்டமைப்பு - 16
மக்கள் விடுதலை முன்னணி - 6
ஈழ மக்கள் குடியரசு கட்சி - 1