டிரெண்டிங்

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்- அழகிரி

ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார்- அழகிரி

webteam

கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைந்து ஒரு வாரம் கூட முழுமையாக முடியாத நிலையில், ஸ்டாலின் தலைமை குறித்து மு.க.அழகிரி காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அப்போது அழகிரியின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரிய அதிர்வலையை உருவாக்கியது. அதன்பின்  மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் ஒரு லட்சம் ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தவுள்ளதாக அறிவித்து கடந்த சில நாட்களாக தன்னுடைய மதுரை வீட்டில் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்தார்.

இதற்கிடையே திமுக சார்பில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க அழகிரி, கட்சியில் எங்களை சேர்த்துக்கொண்டால் திமுகவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். செய்தியாளர்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர் கட்சியில் சேர்த்துக்கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என தெரிவித்தார்.