தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். பிறந்தநாளான ஜனவரி 17-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடப்போவதாக, சில தினங்களுக்கு முன்பு தினகரன் அறிவித்தார். தினகரனின் இந்தத் தன்னிச்சையான அறிவிப்பு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்.எல்.ஏ.,க்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், தினகரன் தனிக்கட்சி முடிவை, கைவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், நாமக்கல் வெண்ணந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன், “தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன், அதிமுக உறுப்பினராகவே இருப்பேன்”என்று கூறியுள்ளார். மேலும், “18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்யமாட்டோம். 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருப்போம். நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.