டிரெண்டிங்

இரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்? இதை தெரிந்துகொள்ளுங்கள்

இரண்டாவது குழந்தைக்கு தயாராகிற பெற்றோரா நீங்கள்? இதை தெரிந்துகொள்ளுங்கள்

Sinekadhara

இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்வது அவரவர் விருப்பம். ஆனால் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே இடைவெளி அவசியம். இப்போது பெரும்பாலான பெண்கள் முப்பது வயதில்தான் முதல் குழந்தைக்கே தயாராகிறார்கள். எனவே இரண்டாம் குழந்தைக்கு இடைவெளி எடுப்பது சிரமமான ஒன்றாக உள்ளது.

முதல் குழந்தைப்பேறுக்குப் பின் உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்காக மீண்டும் கருத்தரிப்பதற்கு முன், முதல் பிரசவத்திலிருந்து முழுவதும் குணமடைவது அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தைப் பிறந்த ஆறு மாதத்திற்குள் மீண்டும் கருத்தரிக்கும்போது குழந்தைக்கு அதிக ஆபத்தும், எடை குறையவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக 18-23 மாதங்கள் இடைவெளி அவசியம். அப்போதுதான் உடல் முழுவதுமாக குணமடைந்து அடுத்த கருத்தரிப்புக்கு தயாராகும்.

ஆறு மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பைவிட, 7-17 மாதங்களுக்குள் கருத்தரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், பாதிப்புகள் ஏற்படுவது தெளிவாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு குழந்தைகளுக்கான இடைவெளி அதிகரிக்கும்போது, பிணைப்பு குறைகிறது. தன்னுடைய இடத்தை இரண்டாவது குழந்தை எடுத்துக்கொண்டதாக நினைத்து தன்னைத் தானே முதல் குழந்தை பிரித்துக்கொள்ளும் எனச் சொல்லப்படுகிறது.

அடுத்த கருத்தரிப்புக்கு 7 மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை இடைவெளி எடுத்துக்கொள்ளவேண்டும். இது தாயும் குழந்தையும் ஓரளவு ஆரோக்கியமாக இருக்க உதவும். இரண்டு குழந்தைகளை அடுத்தடுத்து பெற்றுக்கொள்வதன்மூலம் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.