கட்சியில் 21 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளதால் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
அதிமுக சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கு, சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் பங்கேற்றார்.
நேர்காணலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத், “நேர்காணலின் போது கட்சியில் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து கேட்டார்கள். யாருக்கு அழைப்பு விடுப்பது என்பது பற்றி தலைமை முடிவு செய்வார்கள். நான் போட்டியிடுவதால் வாரிசு அரசியல் முத்திரை குத்தப்படுமா என்ற கேள்வி உள்ளது. நான் அமெரிக்காவில் படித்துவிட்டு, தமிழகம் திரும்பி மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து நேராக தலைமை அலுவலகம் வந்து மனு அளிக்கவில்லை. என்னுடைய 18 வயதிலிருந்து கட்சிக்காக பணியாற்றி வருகிறேன். இப்பொழுது எனக்கு வயது 39.
21 வருடமாக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் நான் பணியாற்றி இருக்கிறேன். தேனி மாவட்டத்தில் நான் போகாத வீடுகளே கிடையாது. அடிமட்ட அளவிலிருந்து படிப்படியாக உயர்ந்து, இந்த அளவிற்கு வந்துள்ளேன். என்னுடைய 39 வயதில் கட்சிக்காக இத்தனை வேலைகள் செய்துள்ளேன் என்ற உரிமையில் சீட் கேட்டுள்ளேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நான் வளர்ந்த பகுதி முன்னேற வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் மக்கள் பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன். அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும். நான் தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருக்கிறேன்” என்று கூறினார்.
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தேனி அல்லது விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்தார். அவருக்கு தேனியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.