சிறைக்கு போவதில் எந்த அவமானமுமில்லை என்று ரசிகர்களுடனான சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா மற்றும் ரசிகர் நற்பனி மன்றத்தின் 39-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில், “நான் சிறைக்கு போவதில் எந்த அவமானமுமில்லை. நான் என்ன திருடிவிட்டா சிறைக்கு செல்லப் போகிறேன். திருட்டுத் தனம் செய்பவர்கள் பெரிய மனிதர்கள் போல் நடந்து கொள்வதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை” என்றார். இந்து தீவிரவாதம் குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் மத்தியில் கமல் பேசுகையில், “சரித்திரத்தை திரும்பி பார்க்காமல் செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து வருகிறோம். இயற்கை சீற்றத்திற்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியாது. பேரழிவு வரும் வரை காத்திருக்க வேண்டுமா? வருமுன் காக்க அனைவரும் முன் வர வேண்டும். ஏதோவொரு ஆர்வக்கோளாறில் பதவிக்காக பிரச்சனைகளை பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டுக்காக கையேந்துவதில் வெட்கம் இல்லை.
எத்தனைபேர் மிரட்டுகிறார்கள் எண்ணிக்கை முக்கியமில்லை, என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம். அடக்குமுறை என்பது அரசியலில் எதார்த்தமாகிவிட்டது. பணக்காரர்கள் வரியை செலுத்தினாலே நாடு ஓரளவு சரியாகும். நான் அடிவாங்கிக் கொள்கிறேன். அடிக்கடி தட்டுவதற்கு நான் மிருதங்கமில்லை” என்று கூறினார்.