டிரெண்டிங்

காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்பு

காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்பு

rajakannan

காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் முடிவிற்கு காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்த்தை  மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை பிரித்து ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவை உருவாக்கப்படும் என அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா மத்திய அரசின் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சிந்தியா தன்னுடைய ட்விட்டரில், “இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் முழுமையாக இணைக்கும் முடிவினை ஆதரிக்கிறேன். அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளை சரியாக பின்பற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அப்படி செய்திருந்தால், எந்தவித கேள்வியும் எழுந்திருக்காது. நாட்டு நலன் சார்ந்த விஷயம் என்பதால், இதனை நான் ஆதரிக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த மாதம் ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.