டிரெண்டிங்

என் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்

என் பதவியை துறக்க தயார் - ஓ.பன்னீர்செல்வம்

webteam

கட்சியின் வளர்ச்சிக்காக என் துணை முதல்வர் பதவியையும் துறக்க தயார் என நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் . 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுகவின் அவசர செயற் குழுக் கூட்டம் ஆகஸ்ட் 14ம் தேதி நடைப்பெற்றது. அடுத்ததாக திமுக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் கடந்த 20ம் தேதி நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்திருந்தனர். 

ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 16ஆம் தேதி மரணம் அடைந்ததால், அதிமுக செயற்குழு கூட்டம் 23-ம் தேதி நடக்கும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தின் போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

அத்துடன் மறைந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் போஸ் மற்றும் கேரள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதவிர ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை பாராட்டியும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருகிணைப்பாளர் பன்னீர்செல்வம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில்  நமக்கு பெற்றுத் தந்தார். அவர் 37தொகுதியில் வெற்றி பெற செய்து வரலாறு படைந்தார், எனவே வரும் தேர்தலிலும் அவர் பெற்று தந்த வெற்றியை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நாம் மறைந்த முதல்வருக்கு செய்யும் அஞ்சலியாகும் என பேசியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அதற்காக நான் உட்பட மூத்த நிர்வாகிகள் பதவியை துறக்கவும் தயாராக இருப்பதாக உணர்ச்சி பொங்க கட்சியனரிடம் தெரிவித்ததாக தெரிகிறது. 

செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேர்தல் வந்தால் எவ்வாறு எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட, ஜெயலலிதாவால் வளர்க்கட்ட அதிமுகவின் வெற்றி நாம் எப்படி கட்டிக்காக்க வேண்டும் என்றே நான் உருக்கமாக பேசியதின் சுருக்கம். என்றார். 

அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கையில் சுணக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே ? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, தமிழக அரசியல் வரலாற்றில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்ட்டு 6 மாதத்தில் 1.22 கோடி உறுப்பினர்களை பெற்ற மாபெரும் இயக்கம் அதிமுக என தெரிவித்தார். தேர்தல் வருவதையொட்டி மூத்த நிர்வாகிகள் தங்களில் பதவிகளை துறந்துவிட்டு கட்சி பணியில் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறதே என்ற மற்றொரு கோள்விக்கு யூகமான கேள்விக்கு என்னிடம் பதில் வராது என்றார். 

எங்களோடு இணைந்து வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்ற அவர், அது மாநில கட்சியாக இருந்தாலும் சரி, தேசிய கட்சியாக இருந்தாலும் சரி என்றார். பாஜகவுடன் - அதிமுக கூட்டணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, அது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும்போது முடிவுகள் அறிவிக்கப்படும் என்றார் பன்னீர்செல்வம்.