டிரெண்டிங்

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?: பன்னீர்செல்வம் விளக்கம்

எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா?: பன்னீர்செல்வம் விளக்கம்

rajakannan

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தமக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அமைச்சர் தங்கமணி, அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் ஆகியோர் விமானம் மூலம் டெல்லி சென்றனர். பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இன்று காலை 12 மணியளவில் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். பிரதமர் உடனான, இந்த சந்திப்பு, சுமார் 40 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. அவருடன் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ‘மின்வாரியத்திற்கு தேவையான நிலக்கரியை வழங்க வேண்டும், தமிழகத்திற்குத் தர வேண்டிய 17 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இருப்பதாக’ தெரிவித்தார். 

டெங்கு தடுப்பு பணி குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும் இதற்காக மத்திய அரசின் மருத்துவக்குழு தமிழகம் வர இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும், தமக்கும் முதலமைச்சர் பழனிசாமிக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெளிவுபடுத்தினார். முதலமைச்சருடன் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் திருச்சி செல்லவிருந்த நிலையில், அதனை ரத்துசெய்துவிட்டு டெல்லி சென்றது தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.