மோடி வெற்றி பெற நான் அரசியலுக்கு வரவில்லை, தமிழகம் வெற்றி பெறவே நான் வந்துள்ளேன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், "நான் ஓராண்டு கழித்து கோவைக்கு வரும் நிலையில் இந்த காலத்தில் எந்த வாக்குறுதியும் கோவையில் நிறைவேற்றப்பட்டதாக தெரியவில்லை, அடிப்படை வசதிகள் கூட திமுக ஆட்சி செய்யவில்லை. ஊழலுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போட்டியை தான் ஊடகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. கழகங்கள் இருவரும் வீழ்ந்தால் மகிழ்ச்சி தான், தற்போதும் கூட எங்கள் கட்சிக் காரர்கள் மிரட்டப்படும் நிலையில் அதையும் பாராட்டாகவே பார்க்கிறேன்" என்றார்.
மேலும், "மோடி வெற்றி பெற நான் அரசியலுக்கு வரவில்லை, தமிழகம் வெற்றி பெறவே நான் வந்துள்ளேன். எங்கள் வேட்பாளர்கள் வாக்குறுதியை பிரமாண பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். நீட் தேர்வை ஒழிப்பேன் என சொன்னவர்கள், இப்போது நீட்டுக்கு பயிற்சி கொடுப்போம் என தெரிவிக்கிறார்கள்.
எங்கள் வேட்பாளர்கள் எந்த கட்சிக்கும் தாவவில்லை, அவர்களை மற்ற கட்சியினர் கொத்தி செல்கின்றனர். அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் வேடிக்கை பார்க்காமல் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும். கோவை மாநகராட்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கிற்கும் அதற்கு இணையாக மரம் நடப்படும். கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் நிறைவேற்றுவார்கள், அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்" என கேட்டுக்கொண்டார்