கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் மற்றும் நற்பணி இயக்கத்தின் 39-ம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய கமல், கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், “கட்சி தொடங்க பணம் தேவை என்று சொல்கிறார்கள். ரசிகர்கள் நினைத்தால் பணம் தந்துவிடுவார்கள். அதனால், அரசியல் கட்சி தொடங்க பணம் தேவை என்பது குறித்து எனக்கு பயமில்லை. அரசியல் கட்சி அறிமுகத்தை அமைதியாகத் தான் செய்ய முடியும்.
கட்சி தொடங்குவதற்கான முதல் பணி தான் செயலி அறிமுகம். ரசிகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. நவம்பர் 7ஆம் தேதி செல்போன் செயலியின் பெயரும், செய்முறை விளக்கமும் அறிமுகம் செய்யப்படும். கட்சி தொடங்க ரசிகர்களிடம் பெறும் பணத்துக்கு கணக்கு வைக்க மொபைல் செயலி பயன்படுத்தப்படும்” என்றார்.