தான் இந்து விரோதி அல்ல என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகிற 21-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்றும் பெயர் வைத்துள்ளார். மேலும் சுற்றுப் பயணத்தை தொடங்கும் 21-ம் தேதியே தனது கட்சியின் பெயரையும் கமல்ஹாசன் அறிவிக்க இருக்கிறார்.
இதனிடையே தமிழ் வார இதழ் ஒன்றில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்கிற பெயரில் கமல்ஹாசன் தொடர் எழுதி வருகிறார். இதில் தான் இந்து விரோதி அல்ல என்று நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். மேலும் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களையும் அதேபோல் தான் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “ சிலருக்கு நான் வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் எனும் தோற்றத்தை உண்டாக்க சிலர் முயற்சி செய்கிறார்கள். நான் இந்து விரோதி அல்ல. என் வீட்டிலேயே சந்திரஹாசன், ஸ்ருதி என தீவிர பக்தர்களை வைத்துக்கொண்டு அவர்களை ( இந்து மக்களை) நான் எப்படி வெறுக்க முடியும். அது அவரவர் ஏற்றுக்கொண்ட வழிமுறை. காந்தி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களை சமமாக பாவித்து என் ஆசானாக ஏற்று வழி நடத்துகிறேன். நாளை நமதே பயணத்தில் பொதுக்கூட்டங்களை கலந்துரையாடல் மேடைகளாக மாற்றத் திட்டமிட்டிருக்கிறோம். ” என கமல்ஹாசன் கூறியுள்ளார்.