தூத்துக்குடியில் நடந்த வன்முறைக்கு கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்தின் போயஸ் கார்டன் வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின், காயமடைந்தவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி "தூப்பாக்கிச்சூடு வன்முறைக்கு சில விஷக் கிருமிகளும் சமூக விரோதிகளே காரணம்" என ரஜினிகாந்த் தெரிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தூத்துக்குடியிலிருந்து சென்னை திரும்பியப்பின் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, "போராட்டத்தின் கடைசி கட்டத்தில் உள்ளே புகுந்து கெடுத்தது சமூக விரோதிகள்தான். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் உள்ளே புகுந்து போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். போலீசாரை தாக்கிய பின்புதான் பிரச்னையே தொடங்கியது. போலீஸ் உடையில் இருப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஒருபோதும் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டேன்" என்றார்.
ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு பல்வேறு தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில அமைப்புகள் ரஜினியின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போயஸ் கார்டன் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.