பாம்பு என்றாலே நடுக்கமெடுக்கும் பலருக்கு. உத்ராகண்டில் உள்ள ஒரு வீட்டில் பிடிக்கப்பட்ட ராஜநாகத்தைக் கண்டால் மெய்சிலிர்த்துவிடும். நைனிடாலில் உள்ள ஒரு வீட்டில் இருந்து விஷம் தன்மை கொண்ட பாம்பை வனத்துறையினர் கைப்பற்றிய வீடியோ திகிலூட்டும் வகையில் உள்ளது.
இந்திய வனசேவை அதிகாரி ஆகாஷ்குமார் வர்மா ட்விட்டரில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். டி.எஃப்.ஓ நைனிடாலை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். வீட்டில் மேஜையின்கீழ் படுத்திருந்த ராஜ நாகத்தை பிடிக்க பாம்பாட்டி ஒருவர் கீழே சென்று வெற்றிகரமாக பிடித்து மேலே எடுத்துச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது. பாம்பாட்டி ஒரு சாக்கில் பாம்பை வைக்கிறார். ஒரு கட்டத்தில் அது வெளியே வந்து அவரின் கழுத்தை சுற்றத் தொடங்குகிறது. இது பார்ப்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஆன்லைனில் இந்த வீடியோவை பதிவிட்டவுடன் 3,500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 'மெய்சிலிர்க்க வைக்கிறது’, 'தைரியமான அர்ப்பணிப்புள்ள டீமிற்கு பெரிய வணக்கம்’ என்பது போன்ற வியக்கத்தக்க கருத்துகளையும் பெற்றுள்ளது.
மேலும் பாம்பை காட்டில் விட்ட மற்றொரு வீடியோவையும் வர்மா வெளியிட்டுள்ளார்.