குழந்தைகள் தங்களிடம் பொய் சொல்லும் தருணத்தை, ஒவ்வொரு பெற்றோரும் சந்தித்திருப்பார்கள். உண்மையை மறைத்து பொய்சொல்லி சமாளிப்பது சிறு குழந்தைகளிடையே அதிகம் காணப்படும். உண்மையை சொல்லி அடிவாங்குவதைத் தவிர்க்க எளிதாக பொய்சொல்லி விடுவார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்தபிறகும் இதே பழக்கம் தொடர்ந்தால் அது பெரிய பிரச்னைகளுக்கு ஆளாக்கிவிடும். எனவே சில நல்வழிகளை சிறுவயதிலேயே கற்பித்தல் அவசியம்.
நேர்மையே உயரிய கொள்கை
குழந்தை வீட்டிலுள்ள பெரியவர்களைப் பார்த்துதான் வளரும். அவர்கள் நேர்மையாக உண்மையாக இருப்பதைப் பார்க்கும் குழந்தைகளும் அவ்வாறே இருக்க விரும்பும். அவர்கள் ஏமாற்றுவதை, பொய் சொல்லுவதைப் பார்க்கும் குழந்தைகளும் அதேபோல்தான் வளரும்.
முன்னுதாரணமாக இருங்கள்
உங்கள் வாழ்வில் கிடைத்த அனுபவங்கள் மற்றும் பிறருடைய பயனுள்ள அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் அடிக்கடி பொய் சொல்லுவதை உணர்ந்தால், உடனே கண்டிக்காதீர்கள். பொறுமையாக எடுத்துச்சொல்லுங்கள். மற்றவர்களுடைய வாழ்க்கைப் பாடங்கள், அனுபவங்கள், நேர்மை மற்றும் உண்மை பற்றிய புத்தகங்களை படிக்க வையுங்கள். இது எதிர்காலத்தில் ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும்.
உங்கள்மேல் நம்பிக்கை வரட்டும்
தவறு செய்துவிட்டால் பெற்றோர்கள் தண்டிப்பார்களே என்ற பயம் வரும்போது பிள்ளைகள் பொய்சொல்லுவார்கள். எனவே உங்களிடம் உண்மையைச் சொன்னால் தண்டனைக்குப் பதிலாக நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையை வரவைக்க வேண்டும். இதனால் என்ன நடந்தாலும், என்ன பிரச்னை வந்தாலும் உங்களிடம் வந்து உண்மையைச் சொல்ல தயங்கமாட்டார்கள்.
காரணத்தைக் கண்டுபிடியுங்கள்
உங்கள் குழந்தைகள் ஏன் அடிக்கடி பொய் சொல்லுகிறார்கள் என்பதற்கான காரணத்தைத் தேடுங்கள். அதுபற்றி அவர்களிடம் பேசி, எடுத்துக்கூற வேண்டும். காரணத்தைக் கண்டுபிடித்து தீர்வு காணாவிட்டால், பொய் சொல்வதே நிரந்தர பழக்கமாகிவிடும்.
விளைவுகளைப் புரியவையுங்கள்
ஒரு பொய் சொன்னால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை புரியவைக்கவேண்டியது பெற்றோரின் கடமை. இதனால் எதிர்காலத்தில் யாரும் குறைசொல்லமுடியாத ஒரு ஆளாக உருவாக்க முடியும். நேர்மையாக இல்லாவிட்டால் எதிர்காலத்தில் யாரும் நம்பமாட்டார்கள் என்பதை எடுத்துக்கூறுங்கள். திட்டி, அடிப்பதால் நிலைமை மோசமாகுமே தவிர, நல்வழிப்படுத்த முடியாது. எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
இதையும் படிக்கலாம்: நீங்க தினமும் சரியாத்தான் பல் துலக்குறீங்களா?