குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தும்பட்சத்தில் தேர்தல் தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு எவ்வளவு ஆதரவு வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் 776 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். அவர்களது மொத்த வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408. நாடு முழுவதும் உள்ள 4,120 சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்கு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 495. மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903.
அவற்றில் தற்போதைய நிலவரப்படி, பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு வாக்குகள் 48.64 சதவிகிதமாக உள்ளது. அதன் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு விகிதம் 35.47 சதவிகிதமாகும். பிற கட்சிகள் வசம் உள்ள 13.06 சதவிகித வாக்குகள் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வகையில் இருக்கின்றன.
அவற்றில் அதிமுக வசம் 5.36 சதவிகித வாக்குகள், பிஜு ஜனதா தளம் வசம் 2.98 சதவிகித வாக்குகள், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் வசம் 1.99 சதவிகித வாக்குகள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸிடம் 1.53 சதவிகித வாக்குகள், ஆம் ஆத்மி வசம் 0.82 வாக்குகள், இந்திய தேசிய லோக்தள் வசம் 0.38 சதவிகித வாக்குகள் இருக்கின்றன.
இவற்றில் பிஜு தனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் தங்களது ஆதரவை பாரதிய ஜனதா கட்சிக்கு தெரிவித்துவிட்ட நிலையில், தற்போதைய நிலவரப்படி பாரதிய ஜனதாவுக்கு 55.14 சதவிகித வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. விரைவில் அதிமுகவும் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது 60.5 சதவிகிதமாக அதிகரிக்கும். இதன் மூலம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியிருக்கி்றது.
அதோடு, குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், பீகார் முன்னாள் ஆளுநர் மற்றும் தலித் வேட்பாளர் என்ற அடிப்படையில், பகுஜன் சமாஜ் கட்சியின் 0.74 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் கூட்டணியிலிருக்கும் சமாஜ்வாதி கட்சியின் 2.36 சதவிகித வாக்குகள் மற்றும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் 1.89 சதவிகித வாக்குகளையும் பெற பாரதிய ஜனதா முயற்சி மேற்கொண்டு வருகிறது.