சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சென்னை காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்டு 24 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 11 ஆயிரத்து 852 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 307 இடங்களில் 1216 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். 10 இடங்களில் 30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தி கூடுதல் பாதுகாப்பை உறுதிபடுத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரவுடிகள் பட்டியலை எடுத்து காவல்நிலையத்திற்கு வரவழைத்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எச்சரித்து அனுப்பும் நடவடிக்கைகளிலும் காவல்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
இதுவரை 1789 ரவுடிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கையை சென்னை காவல்துறை மேற்கொண்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமம் பெற்ற துப்பாக்கிகள் சென்னையில் 2767 உள்ளது. 1796 துப்பாக்கிகள் தேர்தலையொட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 967 துப்பாக்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை. 2 கம்பெனி துணை ராணுவத்தினரின் சென்னைக்கு வந்துள்ளனர். 46 இடங்களில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறை கண்காணிக்க உள்ளனர். கட்டுப்பாட்டு அறை அமைத்தும் கண்காணிக்க உள்ளனர். மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு கண்காணிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பாக இன்று வரை 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- சுப்ரமணியன்