டிரெண்டிங்

அகமது படேலின் வெற்றியைத் தடுக்க பாஜக சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

அகமது படேலின் வெற்றியைத் தடுக்க பாஜக சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

webteam

குதிரை பேரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 42 பேர் பெங்களூரு அருகேயுள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சென்றுள்ள குஜராத் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நிஷித் வியாஸ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் காங்கிரஸின் அகமது படேலைத் தோற்கடிக்க பாரதிய ஜனதா சதி செய்து வருவதாகவும், அதனை முறியடிக்கவே எம்எல்ஏக்களை பெங்களூரு நகருக்கு அழைத்து வந்துள்ளதாகவும் வியாஸ் கூறியிருக்கிறார். ஏற்கனவே குஜராத்தில் காங்கிரஸைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டனர். பாஜக அரசு, ஆட்சி, பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இதனை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மீது காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர்களை பெங்களூருவுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக விஜய் ரூபானி கூறியிருக்கிறார். இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தது. அந்த மனு தொடர்பாக, வரும் 31 ஆம் தேதிக்குள் குஜராத் மாநில தலைமைச் செயலாளர் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து எம்எல்ஏக்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.